
Saturday, March 24, 2007
Sunday, March 4, 2007
உடல் எடையைக் குறைக்க உன்னத வழி
60 வயதானவர், நல்ல உடல் நலத்துடன் இருந்தார். அவரது நண்பர், தங்களது உடல் நலம் இவ்வளவு நன்றாக இருக்கிறதே, என்ன காரணம்? என்று கேட்டார். அவர் சொன்னார். பீஸ் இல்லாமலேயே டாக்டர்கள் என்னைப் பாதுகாக்கிறார்கள். அவர்கள்தான், கடவுளின் வரப்பிரசாதமான எனது இரண்டு கால்கள் என்றார். தினமும் காலை 45 நிமிடம், மாலையில் 45 நிமிடம், நடந்து உடற்பயிற்சி செய்வதை அவர் குறிப்பிட்டார்.சமீப காலமாக தொலைக்காட்சியில் உடற்பயிற்சிகளைப் பற்றி விளக்கமும், செய்முறைப் பயிற்சியும் காட்டப்படுகிறது. இது ஓரளவு பலன் அளித்து வருகிறது. நிறைய பேர், காலையில் நடக்கவோ, ஓடவோ, குதித்துக் குதித்து கயிறு தாண்டவோ செய்கிறார்கள்.சிலர் அதிக எடையுள்ளவர்களுக்குத்தான் உடற்பயிற்சி தேவை. நமக்கல்ல என்று கருதுகிறார்கள். இது தவறு. வழக்கமாக அனைவரும் உடற்பயிற்சி செய்வது நல்லது. உடம்பு ஒரு கோவில் மாதிரி. அதைப் பேணுவது நமது தலையாய கடமையாகும். நோய் வந்த பின்னர் அதைப்பற்றி கவலைப்படுவது அர்த்தமற்றதாகும். உடற்பயிற்சி செய்வதால், மனித உடலின் திசுக்கள் பலமடைந்து, உடல் அதிகமான வேலையைத் தாங்கும் சக்தி பெறுகிறது. உடற்பயிற்சி குறைந்தால், தசைகள் தேய்மானம் அடைகின்றன. இருதயம் பலவீனம் அடைந்து, செயல்திறன் அற்று விடுகின்றது. சக்திக் குத் தேவையான வேதியப் பொருட்களின் சேமிப்பு குறைகிறது. இதனால் உடலின் தேவையைச் சமாளிக்க முடியாமல் போகிறது. அவசர அவசிய நேரங்களில் துரிதமாகப் பணியாற்ற முடியாமல் போகிறது. இருதயத் தாக்கம், பக்கவாதம், நீரிழிவு போன்ற வளர்சிதை மாற்றக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இவற்றை எல்லாம் தடுக்க, தவிர்க்க, நடை ஒரு நல்ல பயிற்சியாகும்.உடற்பயிற்சி இருதயத்திற்குப் போதிய வலு அளிக்கிறது. ஏனெனில் உடற்பயிற்சியினால் இருதயத்திற்கு போதிய ஆக்ஸிஜன் கிடைக்கிறது. அதன் திறனும், பலமும் அதிகரிக்கிறது. இதனால் ஓய்வு நேரத்தின் போதும், உடல் உழைப்பின்போதும் இருதயத் துடிப்பு துரிதமாக இன்றி லயத்துடன் இருக்கிறது. இதனால், ரத்தத்தை உந்தித்தள்ளும் திறன், சீராக அமைகிறது. ரத்த அழுத்தத்தைப் பொறுத்த வரையில், உயற்பயிற்சியால் ரத்தமிகை அழுத்தம் குறைகிறது. மாரடைப்பு அபாயமும் குறைகிறது. வழக்கமாகச் செய்யும் உடற்பயிற்சியினால் உடல் எடையைக் குறைத்து நீரிழிவு நோய்க்கான மருந்துகளை நிறுத்தியவர்கள் பலர் உண்டு.30 வயதிற்குப் பிறகு, உடம்பின் தசைப் பரிமாணம் குறைகிறது. ஆகவே முக அழகு குறையலாம். நடக்கும்போது கைகளை வீசி நடந்தால் இதையும் ஈடு செய்யலாம். கைகளை மேலேயும், கீழேயும், பக்கத்திலேயும் வீசி நடந்தால், தோள்பட்டைத் தசைகள் மற்றும் கைகள், முதுகு, இரைப்பை, கால்கள், பிட்டங்கள் ஆகியவற்றின் தசைகள் பலமடைகின்றன. தசைகளுக்கு ரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது. மன உளைச்சலையும் குறைக்கிறது.டாக்டர் கிளாட்மில்லர் என்ற மனநோய் வல்லுனர், தினமும் அரை மணி நேரம் காலையிலும், மாலையிலும் நடந்தால் பெருமளவில் மன உளைச்சல், தூக்கமின்மை ஆகியவற்றைத் தீர்க்கலாம் எனக்கூறுகிறார். டேவிட் தோரோ, சார்லஸ்டிக்கன்ஸ் போன்ற அறிஞர்கள் தினமும் காலையிலும், மாலையிலும் நடக்க முடிந்ததால், நன்கு சிந்தனை செய்யவும், அரிய நூல்களைப் படைக்கவும் முடிந்தது என்கின்றனர். தினமும் காலையில் நடப்பது. தங்கள் செயல் வேகத்தையும், பார்வை கூர்மையையும், ஞாபக சக்தியையும் அதிகரிப்பதாக அவர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.எலும்புகளின் அடர்த்தி, வயது அதிகரிக்கும்போது குறைகிறது. இதனால் எலும்பு முறிவு, எலும்புப் பிசகுதல் போன்றவை ஏற்படலாம். இதைக்கூட, தினமும் நடப்பதன் மூலம் தவிர்க்கலாம். நடக்கும்போது உடலின் எடை முழுவதையும் கால்கள் தாங்குவதால் எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, எலும்பு நலிவு தவிர்க்கப்படுகிறது.25 வயதுக்குப் பின் வளர்ச்சிதை மாற்றம் குறைகிறது. கொழுப்புப் பொருள் உடலில் அதிகரிக்கிறது. ஆகவே உடலில் உள்ள அதிகக் கொழுப்பு பொருளைக் குறைக்க நடத்தல் போன்ற உடற்பயிற்சியுடன் நாம் உண்ணும் உணவின் கலோரிகளையும் குறைக்க வேண்டும்.வெண்ணை, ஐஸ்கிரீம், நெய், எண்ணை, சர்க்கரை, ஜாம், தேன், சாக்லேட்டுகள், இனிப்புப் பொருள்கள், புட்டியில் அடைக்கப்பட்ட உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பிஸ்கோத்துகள், மதுபானங்கள் ஆகியவை உடல் எடையைக் குறைக்க தவிர்க்கப்பட வேண்டிய உணவு வகைகள்.நமது உடலில் போதுமான எடைக்கு மேற்பட்டு கூடும் ஒவ்வொரு கிலோவும், நமது இருதயத்தின் மீது ஏற்றப்படும் அதிகமான எடையாகும். அதைத் தவிர்க்க நடத்தல் போன்ற உடற்பயிற்சியும், உணவு கட்டுப்பாடும் மிகவும் அவசியம் ஆகும்.
(இளவரசு, சென்னை).
(இளவரசு, சென்னை).
Subscribe to:
Posts (Atom)